இனிய இல்லக் குறிப்புகள்
இடம் தேர்வு செய்தல்
முதலில் எந்த ஊரில் எங்கு மனை வாங்குவது என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்யுங்கள். அந்த மனைக்குச் செல்லும் வழி முக்கியமான பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மனைக்குச் செல்லும் சாலை குறைந்தது இருபத்து மூன்று அடி அகலம் இருக்க வேண்டும். மனை வாங்கும் ஏரியா வளர்ச்சி பெறக் கூடியதாக (development) இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும், வீடுகட்ட உபயோகிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். மனைக்கு அரசு ஒப்புதல் கிடைத்திருக்க வேண்டும். மனை வாங்குமிடம், மனைவி மற்றும் குழந்தைகள் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். அக்கம் பக்க மனைகளில் ஒரு சில வீடுகளாவது உள்ளதா, அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அவர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி வேகத்தைத் தெரிந்துகொள்ள முடியும். எதிர் காலத்தில் அந்தப் பகுதியில் அரசு அல்லது தனியார் எவரேனும் ஏதேனும் கட்டுமானப் பணிகள் செய்ய இருக்கின்றனரா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி இருக்கும்பட்சத்தில் அதனால் நாம் வாங்க இருக்கும் மனைக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற விவரங்களை நமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நேரே சென்று அந்தந்தத் துறையினரைச் சந்தித்து விவரங்கள் கேட்பது நல்லது. குறைந்தது வீட்டிற்கு வெளியே தினமும் செல்லும் குழந்தைகளின் கல்விச்சாலை அல்லது கணவன் மனைவி இவர்களின் அலுவலகம் வீட்டிலிருந்து எளிதில் சென்று வரக்கூடியதாக அமைய வேண்டும். அவசரத்தேவைகளுக்குச் சிறிய பெட்டிக் கடையாவது அந்தப் பகுதியில் இருக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்தல் இப்போது நாம் வாங்க இருக்கும் மனை விற்பவரிடம் சென்று, அவரிடம் உள்ள ஆவணங்களைப் பார்க்க வேண்டும். ஆவணங்கள் பார்க்கத் தெரிந்தவர்கள் எவரேனும் உடன் இருத்தல் அவசியம். அந்த இடத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC) வாங்க வேண்டும். வில்லங்கம் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு பத்திரப்பதிவு செய்யலாம். தேவைப்பட்டால் வழக்கறிஞர் அறிவுரைக்குப்பின் பத்திரம் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தவுடன், ஒவ்வொன்றிலும் நான்கு நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வது பின்னர் உதவிகரமாக இருக்கும். மனை சம்பந்தப்பட்ட மூல ஆவணங் களைத் தேவை இல்லாமல் வெளியேகொண்டு செல்வதைத் தவிர்க்கவும். நகல்களை மட்டுமே எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்ளவும்.
திட்டமிடல்
நமக்கு எத்தனை அறை தேவை, கழிப்பறை எத்தனை, சமையல் செய்ய அறை, ஹால், கார் நிறுத்தும் இடம், மற்ற தேவைகள் என்ன என்பதனையும், கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்துதல் முதலியவற்றையும் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் கடன் தரும் வங்கிகளில் வாங்கப் போகும் கடன் தொகைக்குத் தவணைத்தொகை (Equated Monthly Instalment -EMI) பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொள்வது நலம். தரையில் இரண்டு படுக்கை அறைகள் போதுமானது. தேவைப்பட்டால் மாடியில் குளியலறையுடன் கூடிய ஓர் அறை கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. அனுமதி பெற்ற கட்டிடப் பொறியாளரிடம் உங்கள் தேவைகளைச் சொல்லி வீட்டின் வரைபடம் வரைந்து முறையான அனுமதிபெற வேண்டும்.
வீட்டுக் கடன்
இனி நீங்கள் எந்த வங்கியில் வீடு கட்ட கடன் வாங்க முடிவு செய்தீர்களோ அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதம், உங்கள் வருமானச் சான்று, மற்றும் கடன் விண்ணப்பம் இவற்றுடன் செல்லாம். அங்கு வீட்டு வசதி கடன் பிரிவு அதிகாரியை நேரில் சந்தியுங்கள். இடைத்தரகர் எவரும் தேவை இல்லை. நீங்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். அவர் கேட்கும் கேள்விகள் உங்கள் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களால் மாத தவணை எவ்வளவு செலுத்த இயலும், உங்களின் இதர கடன் சுமை போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும்.
பொறியாளரைத் தேட வேண்டும்
கடன் தொகை கிடைத்துடுவிடும் என்றவுடன் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? சுமார் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் அனுபவமிக்க பொறியாளரைத் தேடிப்பிடிக்க வேண்டும். பொருட்களை நீங்களே வாங்கித்தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. அதற்கு முன் அவர் சமீபத்தில் கட்டிய இரண்டு அல்லது மூன்று கட்டிடங்களைப் பார்வையிடுவது அவசியம். அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசி பொறியாளரின் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அதனால் பின்னால் வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
கட்டுமானப் பொருள்கள்
வேலை தொடங்கியவுடன் அடுத்த நாள் செய்யப்போகும் வேலைகள் என்ன? அதற்கு தேவையான பொருட்கள் நம்மிடம் உள்ளனவா எனத் தெரிந்து கொள்வதும் அவசியம். மற்றபடி இதற்கு முன்பு சமீபத்தில் வீடுகட்டிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆலோசனை பெற்று தச்சர், பெயின்டர், கிரானைட் அல்லது மார்பிள் வேலை செய்பவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இம்மாதிரி திட்டமிட்டு வேலைகள் செய்ய வேண்டும். கடைசியாகக் கட்டிடப் பணிகள் முடிந்ததும் மின் இணைப்புப்பெற விண்ணப்பிக்க வேண்டும். மின் இணைப்பு பெற்றதும், சொந்தவீட்டுக்குக் குடிபுகுந்து, ஆனந்த வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்.
No comments:
Post a Comment