December 23, 2014

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்!

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்! 


ண்ணும் கருத்துமாக விவசாயிகளின் நெல்மணிகளை நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல் பாதுகாத்து கொடுக்கும் பெட்டகமாகவும், கருவூலமாகவும்  விளங்கியவை குதிர், பத்தாயம் போன்றவை.
தமிழர்களின் வாழ்வில் நீண்டநெடுங்காலமாக உணர்வுப்பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் தொன்றுதொட்டு அங்கம் வகித்து வந்தன. நமது முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவும், தொலைநோக்குப் பார்வையும் இவற்றில் மிளிர்கிறது. 

உணவின் மகத்துவம் கருதி, அதை எந்த அளவிற்கு  முன்னெச்சரிக்கையோடும், மரியாதையோடும் பாதுகாத்தார்கள் என்பதற்கான பளிச்சிடும் வெளிப்பாடு இவை.
25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், இன்று இவை இருக்கும் இடங்களை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. இவற்றின் மகத்துவம் அறிந்த சில விவசாயிகள், இப்பொழுதும் கூட இதனை பராமரித்தும், பாதுகாத்தும், பயன்படுத்தி வருகிறார்கள்.

பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல... நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட,  கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாக கருதிய கால கட்டம் அது. நெல்லை வாங்கி பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து, அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
காலப்போக்கில் நவநாகரீக வாழ்க்கை முறையால் பத்தாயமும், குதிரும் விரட்டியடிக்கப்பட்டன. “இடத்தை அடைச்சிக்கிட்டு இருந்துச்சு... அதான் வேண்டாம்னு எடுத்துட்டோம்“ என சொல்பவர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரிய அளவில் வெற்றிடம் உருவானது. அதிக விலை கொடுத்து அரிசி வாங்கத் தொடங்கினர்.
அடுத்தக் கட்டமாக, வெளிமாநிலங்களில் பணவெறியோடு அளவுக்கதிகமான ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொட்டி  வியாபாரிகளே முன் நின்று உற்பத்தி செய்யக்கூடிய, பாலீஸ் செய்யப்பட்ட, சத்து இல்லாத சக்கை அரிசி தமிழ்நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தற்போது முழுமையாக எல்லோருடைய வீடுகளிலும் உலா வருகிறது. கிராமப்புறங்களிலும் கூட மைசூர் பொன்னிக்குதான் முழுமையான முதல் மரியாதை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க... பத்தாயம், குதிர் இல்லாத விவசாயிகள்,  தங்களுடைய நெல்லை சாக்கு மூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தை சீர்குலைக்கிறது. கடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்ற பிரச்னை உருவெடுத்து, நெல்லில் கோடுகள் உருவாகும். இதுபோன்ற நெல்லை அரைக்கும் போது குருணை அதிகரித்து, அரிசியின் அளவு குறையும். இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலி தொந்தரவு. சாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டு, ருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது.


சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள், அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ள முடியாமல், அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை, வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தி, விவசாயிகளை சுரண்டுகிறார்கள்.  நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லை, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்குகிறார்கள். உதாரணமாக, 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை சுமார் 900 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, தரம் குறைவான 30 கிலோ விதை நெல்லை 900 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி விதைப்பு செய்கிறார்கள்.

பூச்சி, பூஞ்சாணம், எலி, பனி, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்துப் பிரசனைகளில் இருந்தும் விவசாயிகளை கைத்தூக்கி விடக்கூடிய உதவும் கரங்களாக... பத்தாயம், குதிர், கோட்டை உள்ளிட்டவைகளை திகழ்கின்றன. பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், நம்மை வியக்க வைக்கிறது. பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும். மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.

மண்ணால் ஆன உறைகளை [உருளை} கொண்டு செய்யப்பட்டவை  குதிர். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளை களும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். இதனால் எலி கடிக்காது. அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ் பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.

முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு, உறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாக பிரித்து எடுத்து விட்டு, நெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம். குதிர், பத்தாயம் இவைகளில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3,5,7,9,12 என ஒற்றைப்படையில் தான் அமைப்பார்கள்.
விதைநெல்லின் முளைப்புத்திறன் நீண்டகாலத்திற்கு நீடித்து நிலைக்க, வைக்கோலை தரையில் பரப்பி, அதனை சுற்றிலும் வைக்கோல் பிரிகளை கொண்டு கோபுரம் போல் கோட்டை கட்டப்படும். இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். விதைநெல் தேவைப்படும்போது, இந்த கோட்டையை தண்ணீரில் மூழ்க வைத்து, நன்கு ஊறியதும், அதனை அப்படியே நாற்றங்காலில் போடுவார்கள். வைக்கோல், சாணம் இரண்டு மே உரமாக கைக்கொடுக்கும்.

இது எல்லாமே பழங்கதையாகி, அருங்காட்சியக பொருட்களாக மாறி வருகின்றன... புதிதாய் பிறப்பெடுக்கும் நெல்மணிகளோ, பாதுகாப்பான சூழல் தேடி ஏக்கத்தில் தவிக்கின்றன. குதிர், பத்தாயம், கோட்டையின் தேவை இன்று அவசியமாகிறது.

-கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: க. சதீஸ்குமார்

No comments:

Post a Comment