December 17, 2014

பால்கனியை அற்புதமாக்குவது எப்படி?

பால்கனியை அற்புதமாக்குவது எப்படி?


 

வீட்டின் உட்புறத்தை அழகுப் படுத்துவதைப் போல் வெளித்தோற்றத்தையும் அழகு படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மழைக்காலம், கோடைக்காலம் எனக் காலங்களின் அழகை வீட்டிலிருந்தபடியே ரசிப்பதற்குப் பால்கனிகள் உதவுகின்றன. பால்கனி சிறியதாக இருந்தாலும், அந்த இடத்தை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி அலங்கரிக்க முடியும். பால்கனியையும், வராண்டாவையும் அழகு படுத்துவதனால் வீட்டிற்கு வெளியே நீங்கள் செலவிடும் நேரம் அதிகரிக்கும். பணத்தையும், நேரத்தையும் அதிகமாகச் செலவழிக்காமல் எளிமையான வழிகளில் பால்கனியை அழகாக்கலாம். 
அதற்கான சில வழிகள்: 
 
அலங்காரச் செடிகள் 
 மனதிற்குப் புத்துணர்ச்சியை அளிப்பதில் செடிகளைவிடச் சிறந்த மருத்துவர்கள் கிடையாது. பால்கனியின் அமைப்பிற்கு ஏற்ற மாதிரியான செடிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சுவர்ச் செடிகள், சுவரில் மாட்டக்கூடிய செராமிக் பானைகள் எனப் பால்கனியில் வளர்ப்பதற்கு நிறைய அலங்காரச் செடிகள் இருக்கின்றன. இந்த மாதிரி செடிகள் பால்கனியைப் பசுமையாக்குவதுடன், வீட்டின் முகப்பு அழகையும் கூட்டுகின்றன.

இயற்கையின் வண்ணங்கள்
செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வமோ, நேரமோ இல்லாதவர்கள் பால்கனியை அலங்கரிக்கும் பொருள்களின் நிறத்தால் அழகாக்கலாம். பச்சை - நீல நிறக் கலவையில் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நிறங்கள் இயற்கையுடன் இணைந்திருப்பதைப் போன்ற எண்ணத்தை மனதிற்கு அளிக்கும்.

நேர்த்தியான குஷன்கள்
பால்கனியின் ஃபர்னிச்சர்களுக்கு ஏற்ற குஷன்களை வாங்குவது முக்கியமானது. அவுட்டோர் குஷன்கள் என்று பிரத்யேகமாகவும் கிடைக்கின்றன. ஒருவேளை, அவுட்டோர் குஷன்கள் கிடைக்கவில்லையென்றால், குஷன்களை வெயில், மழைலிருந்து பாதுகாப்பதற்காகத் தனியாக ஒரு ஸ்டோரேஜ் பெஞ்ச் வாங்கிக்கொள்ளலாம். ஃபர்னிச்சர்களுக்குப் பொருந்தக்கூடிய நிறத்தில் குஷன்கள் இருந்தால் கூடுதல் அழகாக இருக்கும்.

தரைவிரிப்புகள் பயன்படுத்தலாம்
பால்கனியிலும், வராண்டாவிலும் தரைவிரிப்புகள் போட்டுவைப்பது வீட்டின் முகப்பை இன்னும் அழகாக்கும். ஆனால், தரைவிரிப்புகள் ஃபர்னிச்சர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெரிதாக இருக்க வேண்டும். அல்லது காபி டேபிளுக்கு அடியில் மட்டும்கூட தரைவிரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

பளிச் குடைகள்
பால்கனியோ, வராண்டாவோ வெட்டவெளியாக இருந்தால் ஒரு பெரிய குடையை வைக்கலாம். கூடுமானவரை, ஃப்ரீஸ்டாண்டிங் குடையாக இருந்தால், தேவையில்லாதபோது மடக்கி வைத்துவிடலாம்.

கண்ணாடி மாட்டி வைக்கலாம்
பால்கனியின் அமைப்பு மேற்கூரை இருப்பதுபோல் இருந்தால் கண்ணாடி மாட்டி வைக்கலாம். இது பால்கனியில் அளவைப் பெரிதாக்கிக் காட்டும். கண்ணாடியின் ஃப்ரேமை ஃபர்னிச்சருக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கலாம்.

No comments:

Post a Comment