December 23, 2014

இனிமேல் படிப்பு வராத யாரையும் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று திட்டாதீர்கள்.....!

இனிமேல் படிப்பு வராத யாரையும் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று திட்டாதீர்கள்.....!

உயர் படிப்பிற்காகக் கென்யாவில் இருந்து வந்துள்ள சகோதரர்கள் இருவர், தங்கள் வருமானத்திற்காக காந்திகிராமம் அருகே உள்ள சாமியார்பட்டியில் தங்கியிருந்து மாடு மேய்த்து பால்விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் படித்து வருகின்றனர்.

டிகிரி முடித்ததும் விவசாயம் பார்ப்பதை கவுரவ குறைச்சலாக கருதும் நம்மூர் இளைஞர்கள் மத்தியில் பிஎச்.டி., படித்துக் கொண்டே மாடு மேய்த்து வரும் கென்யா மாணவர்களை பற்றி கேள்விப்பட்டதும் வியப்பு ஏற்பட்டது. அவர்கள் குடியிருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் சாமியார்பட்டிக்கு சென்றபோது கிராம மக்கள் அழைத்து சென்று அவர்கள் குடியிருக்கும் வீட்டை காட்டினர். கென்யா உஜா பகுதியை சேர்ந்த ராபின்சன், 40, அவரது சகோதரி ஜெரிடா, 30, ஆகியோர் காந்திகிராம பல்கலையில் பிஎச்.டி., படித்து வருகின்றனர். விவசாயம், கிராமப்புற வளர்ச்சிக்கு காந்திகிராம பல்கலை அளித்து வரும் முக்கியத்துவத்தால் கவரப்பட்ட அவர்களுக்கு மாடு வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. 

தற்காக பல்கலை வழங்கிய உதவித்தொகையில் ரூ.46 ஆயிரத்திற்கு இரண்டு பால் மாடுகளை வாங்கினர். மாடு வளர்க்க அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது நிலத்தை தந்து உதவினார். அந்த நிலத்தில் மாடுகளுக்கு கொட்டகை அமைத்ததோடு தேவையான தீவன பயிர்களை விளைவித்தனர். காலை, மாலையில் பாலை கறந்து அங்குள்ள வீடுகளில் விற்பனை செய்கின்றனர். பாலில் தண்ணீர் கலப்பதில்லை. சுத்தமான பால் கிடைப்பதால் இவர்களிடம் பால் வாங்க கிராமமக்களிடம் போட்டி நிலவுகிறது.

ராபின்சன் கூறியதாவது: "நான் மதுரை காமராஜர் பல்கலையிலும், சகோதரி மதுரை பாத்திமா கல்லூரியிலும் முதுகலை பட்டம் முடித்தோம். நான் காந்திய கொள்கை மற்றும் அமைதி பற்றியும், எனது சகோதரி ஜெரிடா பெண்களின் படிப்புகள் பற்றியும் பிஎச்.டி., படிக்கிறோம். எங்களது படிப்பு செலவுக்காக மாடு வளர்த்து வருகிறோம். பால் கறக்கும்போது எண்ணெய்யில் உள்ள அழுக்கு பாலில் கலக்க கூடாது என்பதற்காக மடு காம்பை சுத்தமான நீரால் கழுவுகிறோம். தினமும் 2 மாடுகளில் இருந்து 10 லிட்டர் வரை பால் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.30 க்கு விற்கிறோம். மாதம் ரூ.9,500 கிடைக்கிறது. இந்த பணத்தின் மூலம் எங்களது தேவைகளை பூர்த்தி செய்கிறோம். சனிக்கிழமை சர்ச்சுக்கு செல்வதால் அன்றைய தினம் பாலை இலவசமாக ஊற்றுகிறோம். தீவனம் பயிரிட்டது போக மீதமுள்ள நிலத்தில் காய்கறிகளை சாகுபடி செய்ய உள்ளோம். இதற்காக பல்கலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் விவசாய பணிகளை மேற்கொள்கிறோம். சிறிய பால் பண்ணை அமைக்கும் திட்டமும் உள்ளது,' என்றார்.

வாழ்த்துகள் ராபின்சன் மற்றும் ஜெரிடா.....!

No comments:

Post a Comment