துளசி தரும் வருமானம்..... இயற்கையின் வெகுமானம்!
யாரும் விதை போடவில்லை; நீர் பாய்ச்சவில்லை; களை
எடுக்கவில்லை; லிட்டர் கணக்கில் பூச்சிக் கொல்லி விஷத்தைத் தெளிக்கவும்
இல்லை... ஆனால், காட்டில் உள்ள செடிகள், கொடிகள், மரங்களைப் பாருங்கள்
தளதளவென்று செழுமைகட்டி தானாகவே வளர்ந்து நிற்கின்றன.
"எல்லாம் இயற்கை தந்த வரம்!" என்பார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
"காட்டுல மட்டுமில்லீங்க... நாட்டுலயும்கூட எந்த
இடுபொருளும் இல்லாம தானாகவே வளர்ந்து நின்னு எங்களோட வாழ்க்கைக்கு
வழிகாட்டுதுங்க துளசி..." என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார்கள்
கோயம்புத்தூர் மாவட்டம்... பல்லடம், கொடுவாய், சூலூர் உள்ளிட்ட பகுதிகளைச்
சேர்ந்த மக்கள்.
கிராமப்புறங்களின்
ஓடைக்கரை, மானாவாரி, புறம்போக்கு... என்று பல இடங்களில் பலவிதமான மூலிகைச்
செடிகள் தானாகவே வளர்ந்து நிற்பது வாடிக்கை. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை,
எங்கெங்கும் நீக்கமற விளைந்து நிற்கின்றது துளசி.
பல்லடம்
பகுதியில், ஏக்கர் கணக்கான நிலங்களில் தானே விளைந்து நின்று மணம் வீசிக்
கொண்டிருக்கும் துளசி இலைகளைக் கிள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த மாசானி
மற்றும் பழனியம் மாள் ஆகியோரிடம் பேச்சுக் கொடுத்தோம். இரண்டு கைகளாலும்
'வெடுக் வெடுக்'கென்று இலைகளைப் பறித்த வண்ணம் முதலில் பேசத் தொடங்கினார்
மாசானி.
"மழை பேஞ்சா
போதுங்க, மறு வாரமே 'தளதள'னு முளைக்கத் தொடங்கிடும். குறிப்பா...
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாசத்து பருவமழைக்கு, துளசி நல்லா
வளர்ந்து வரும். எங்கள மாதிரி காடு, கழனி வேலைக்குப் போற கிராமத்துப்
பொம்பளைங்க... ஊருக்கு நூறு, இருநூறு பேருனு கும்பல் கும்பலா கிளம்பிப்
போயி அக்கம், பக்கத்து ஊர்கள்ல விளைஞ்சி நிக்கிற துளசி இலைகளை கிள்ளி,
மூட்டைக்கட்டி எடுத்துக்கிட்டு வருவோம்.
வருஷமெல்லாம்
இது கிடைக்காது. மழை சீசன்லதான் வரும். அந்த சமயத்துல வரிசையா பண்டிகை
இருக்கறதால துளசிக்கு படுகிராக்கி இருக்கும். டவுனுக்குக் கொண்டு போய், பூ
மார்க்கெட்டுல இதை வித்துட்டு வருவோம். ஒரு நாளைக்கு 50 கிலோ வரை ஒரு ஆளு
பறிக்கலாம். கிலோ 6 ரூபாய் வரைக்கும் விலைபோகும். கார்த்திகை மாசத்து ஐயப்ப
பூஜை...
மார்கழி மாசத்து பஜனை சமயத்துல நல்ல விலை கிடைக்கும். தை மாசம்
வரைக்கும் தளதளனு செடிங்க வளர்ந்து நிக்கும். கோடைக் காலம் வந்துட்டா...
காய்ஞ்சிப் போயிடும். அந்தச் சமயத்துல வழக்கம்போல காட்டுவேலைக்கு போக
ஆரம்பிச்சிடுவோம்" என்று மாசனி நிறுத்த...
வாய் நிரம்பிய
வெற்றிலைச் சாற்றை 'ப்ளிச்' என்று துப்பிவிட்டு, ஆரம்பித்தார் பழனியம்மாள்.
"முன்னயெல்லாம், உள்ளூர் மேய்ச்சல் நிலத்துல மானாங்கன்னியா விளைஞ்சி
கிடக்கும். மனம் போல போயி பறிச்சு விற்போம். உள்ளூர்லயே 100 கிலோ வரை
கிடைக்கும். இப்ப மேய்ச்சல் நிலமெல்லாம் குறைஞ்சிப் போயிடுச்சி. தென்னை,
மக்காச் சோளம்னு போட ஆரம்பிச்சிட்டாங்க. கண்ணுல படுற இடத்துலயெல்லாம்
காற்றாலை மெஷின் வேற ஓடுது. அதனால ஓடை, ஏரி, குளம், புறம்போக்குனு பல கிலோ
மீட்டர் தூரம் அலைஞ்சி திரிய வேண்டியதா போயிடுச்சி. எப்படியோ கஷ்டப்பட்டு
பறிச்சி முடிச்சிடறோம். ஆனா, பறிச்சதை பஸ்ஸுல ஏத்திக்கிட்டு
வர்றதுக்குள்ள... கண்டக்டர், டிரைவர்கிட்ட ஓரியாட்டம் போட
வேண்டியாதிருக்கு..." என்றபடியே இன்னொரு வெற்றிலையை வாயில் தள்ளிவிட்டு,
துளசி கிள்ளும் வேலையைத் தொடர்ந்தார் பழனியம்மாள்.
துளசி பற்றி
'இயற்கை விவசாய ஆர்வலர்' தாராபுரம், பாலு சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து
கொண்டார். "துளசி மிக முக்கியமான ஒரு மூலிகைப் பயிர். காற்று, மழை வெள்ளம்,
கால்நடைகள் மூலமாக விதைகள் பரவி, தானே முளைத்துச் செழிக்கின்றது. விவசாயம்
செய்யப்படாமல் கிடக்கும் நிலங்கள் மற்றும் ஓடைக்கரை போன்ற இடங்களில்
தானாகவே வளர்கின்றது.
துளசி இலை
மூலிகை என்றாலும், பெரும்பாலும் ஆன்மிகக் காரியங்களுக் காகவே இது
பயன்படுத்தப்படுகிறது. மருந்து தயாரிப்புக்கு பெரிய அளவில் இங்கே
பயன்படுத்தப்படவில்லை. இந்த இலை களைப் பறித்து நிறைய பேர் விற்று
வருகிறார்கள். இதன் மூலம் ஏழைகள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். ஆனால்...
ரசாயன இடுபொருட் களின் அபரிமிதமான பயன்பாடு, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக
மாற்றப்படுவது, நீர்-நிலைகளின் ஆக்கிரமிப்பு, மண் திருட்டு, மணல் திருட்டு
என்பது போன்ற பல்வேறு காரணங்களால், காட்டுத் துளசிச் செடிகள் வெகுவாக
அழிந்து வருகின்றன. அதைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி என்றுதான்
தெரியவில்லை" என்று வருத்தப்பட்ட பாலு,
"ஒரு ஏக்கரில்
மானாவாரியாக விளைந்து நிற்கும் துளசி மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம்
கிடைக்கும். மானாவாரி நிலங்களுக்குச் சொந்தக் காரர்களாக இருக்கும் யாரும்,
ஆள் வைத்தெல்லாம் துளசியைப் பறிப்பதில்லை. இஷ்டப்பட்டவர்கள் பறித்து
விற்றுக்கொள்ள அனுமதித்துவிடுவார்கள். அவர்களும் இலைகளை மட்டும் பறித்து
விட்டு செடிகள் அதிலுள்ள விதைகளை அப்படியே விட்டு விடுவார்கள். கால் நடைகள்
துளசிச் செடிகளைச் சாப்பிடாது என்பதால், அடுத்த ஆண்டு பெய்யும் அடைமழையில்
மறுபடியும் விதைகள் 'ஜம்' என்று வளரும். தமிழகத்தைப் பொறுத்தவரை
தனிப்பயிராக பெரும் பாலும் பயிரிடப்படுவதில்லை.
நம் உடம்பில்
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில்
கபம் என்ற ஒன்று கூடுவதால் ஏற்படுவதே சளி, இருமல் போன்ற உபாதைகள். இதற்குத்
துளசி ஒரு சிறந்த மருந்து. துளசிச் சாற்றில் தேன்கலந்து பருகினால் வறட்டு
இருமல் குண மாகும். துளசி இலைகளை வெந்நீரில் போட்டு, அதன் ஆவியைப்
பிடித்தால் நெஞ்சுச் சளி கரைந்து விடும். மேலும் துளசி இலையின் புகையை
வீட்டில் பரவவிட்டால், கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் அழிந்துவிடும்.
அதனால் தான் முன்பெல்லாம் அநேக வீடுகளில் துளசி மாடம் அமைத்து துளசிச்
செடியை வளர்த்து வந்தனர். அத்தகைய துளசி, தற்போது அழிவுப் பட்டியலில்
இடம்பிடித்திருப்பதுதான் வேதனை யான விஷயம்" என்று சொன்னார் கவலையோடு!
No comments:
Post a Comment