யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??
என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.
15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று வளர்ந்திருந்தது.4 ஏக்கரா மேட்டுப்பூமி. மீதி 4 ஏக்கரா கத்திரி,வெண்டையெனறு பல காய்கறிகள். முழுக்க இயற்கை விவசாயம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை அவர் அப்பா இரசாயன உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் செய்துவந்தார். என் நண்பர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிததுவிட்டு இரண்டு வருடம் வேலைக்கு போனவர் , கடந்த இரண்டு வருடங்களாக விவசாயத்துக்குள் நுழைந்தவர், கையோடு அப்பாவை சமாதானப்படுத்தி ஆர்கானிக் விவசாயத்தை கையிலெடு துக்கொண்டார்.
ஆரம்பத்தில் பக்கத்து தோட்டக்காரர்கள் எல்லாம் பரிகாசம் செய்ய, அவரது அப்பாவிற்கு இவர்மேல் ஏகத்துக்கும் கோபம். எப்படியோ அவரை சமாளித்து ,இரண்டு ஆண்டுகளில் தலையெடுத்துவிட்டார் நண்பர். சமீபத்தில் ஏதோ ஒரு கல்யாணத்தில் அவரை சந்தித்த உறவினர்கள் அனைவரும் அவரது இயற்கை விவசாயத்தை பாராட்ட அவரது தந்தைக்கு ரொம்பவுமே மகிழ்ச்சி.
“அட கோவு, உன்னோட கத்திரிக்கா எனன டேஸ்ட்டு? உம் மாமா கத்திரிக்கான்னா வாயிலயே வெக்கமாட்டார்..ஆனா, அனனைக்கு உங்க தோட்டத்து கத்திரிக்கா பொறியலை அவரு ஒருத்தரே தின்னு தீத்துட்டார்ன்னா பாரேன்… ” தூரத்து அத்தையொருவர் பாராட்ட, செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைத்தது போலிருந்தது நண்பருக்கு.
அதுவரைக்கும் பொறுமையாயிருந்த அவரது பாட்டி, 85 வயது இருக்கும், இப்போது இடைமறித்தார். “தம்பி,நான் ரெண்டுவருசத்துக்கு முன்னயே மேல போயிருக்க வேண்டியது..இருதயம்கூட மெதுவாத்தான் வேல செய்யறதா டாக்டரே சொன்னாரு( நிமிடத்துக்கு40 துடிப்புகள்தான் இப்போதும்…நண்பர் சொன்னது …நானும் கைவைத்து பார்த்தேன்..மிக மெதுவாகத்தான் இருந்தது).ஆனா எம்பேரனோட இயற்கை காய்கறிகளை ரெண்டு வருசமா சாப்பிட்டு , பாரு…எவ்ளோ தெம்பாயிட்டேன்னு.. ” தலை மெதுவாக ஆடினாலும், வார்த்தைகளில் அநாயச உறுதி தெறித்தது.
அதற்குள்ளாக மருந்தடிக்காத இயற்கையாய் விளைந்த பீர்க்கங்காயை தோல் சீவி, வட்ட,வட்ட ஸ்லைஸ் துண்டுகளாக வெட்டி, உப்பு,மிளகாய் பொடி தூவி சாப்பிட குடுத்தார் நண்பரின் அம்மா. வெள்ளரிக்காய் தோற்றது போங்கள் ..அத்தனை சுவை..லேசாக இனிக்கவும் செய்தது…பீர்க்கங்காயை அப்படியே சாப்பிடலாம் என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது..
60 ஆண்டுக்கு முன்பு நடநத தன்னுடைய கல்யாணத்தை நினைவு கூர்ந்தார் பாட்டி. “என் கல்யாணத்தப்ப, அவரோட(தாத்தாவோட) வீட்டுக்கு எங்க வீட்டு பெரியவங்க எல்லாரும் போயிருந்தாங்க.மாப்பிள்ள வீடு பாக்கணும்ல..அதுக்குத்தான்.. போனவங்க , அவரு வீட்டுல எதை முதல்ல தேடுனாங்க தெரியுமா..? சாணிக் குவியலை.. மாட்டுச்சாலைக்கு பக்கத்துல போட்டுவைச்சிருந்த சாணிக்குவியல்..எவ்வளவு பெரிசு? எத்தனை குட்டுன்னுட்டு..? பாத்துட்டுத்தான் என்னை கட்டிக்கொடுத்தாங்க..
ஏந் தெரியுமா.. ? பாட்டி விடுகதை போட்டார்.
“ஏன் பெரியம்மா? ” தெரியாமல்தான் நானும் கேட்டேன்.
“தம்பி, அந்தக்காலத்துல ஆடு,மாடுதான் ரொம்ப உசத்தி.காசு,பணத்தை யாரு பாத்தாங்க.. ? விவசாயி வீட்டுல சாணிக்குவியல் நிறையா இருந்தா மாடு,கன்னும் நிறைஞ்சுருக்கும்.குடும்பமும் வசதியா இருக்கும்னு பொண்ண நம்பிக்கையா குடுப்பாங்க…” பழைய காலத்துக்கு கூட்டிப்போனார் பாட்டி.
இன்றைய நாகரீக பெண்களோ(ஆண்களும்தான்) சாணியை பார்க்கிற பார்வையே அவர்களது அறுவெறுப்பை சொல்லிவிடுகிறது.மூக்கை பிடித்தபடி நகர்ந்துவிடுகிறார்கள்.
இயற்கையாக வாழ்நத பொழுது தான் எவ்வளவு சந்தோஷமா இருந்தது வாழ்க்கை??
ஆனாலும்..மக்கள் மெல்ல இயற்கையின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறதை பார்த்தால், எனக்கென்னவோ…இழந்த சுகங்களை,நிம்மதியை மீட்டெடுக்கிற நேரம் வந்துகொண்டிருப்பதாகவே படுகிறது..
ஆயிரக்கணக்கில் வருகிற புத்தம்புது நோய்களும், ஆங்கில மருத்துவம் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறபொழுது அந்த நேரத்தில் கைகொடுக்கிற பண்டு பழமையான இந்திய மருத்துவ முறைகளும் ,அதை உறுதி செய்யும் வண்ணம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வேகமாக காலூன்றிவிட்ட யோகா மற்றும் ஆயுர்வேதமும் “இயற்கையை வெல்ல எந்த ஒரு சக்தியுமே உலகில் இதுவரை இல்லை; இனியும் இல்லை ” என்பதை திரும்ப,திரும்ப நினைவுறுத்துகிறது…
யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??
No comments:
Post a Comment