December 23, 2014

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்


ஒரு மணி நேரத்தில், 
ஒரு மூட்டை. 
4 ஆயிரம் ரூபாய்தான் செலவு.

மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என ஒவ்வொன்றுக்கும் வேலையாட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவே முடியும். நிலக்கடலை விவசாயமும் விதிவிலக்கல்ல.

ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் மூட்டைக் கட்ட ஆரம்பித்து விட்டனர் விவசாயிகள் பலரும். அதையும் மீறி பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடலை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் பலரும்.
10458081_816498045037252_5975163855287643402_n 10625104_816497981703925_9019885439905458753_n
அத்தகையோரில் ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விப்பட்ட, புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றையே உருவாக்கிவிட்டார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு, அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பாக்குற ஆசிரியர் ஒருத்தர், அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பல்லாம் மூட்டைக் கணக்குல பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரல. காரணம் கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலை’னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.

எங்க வீட்டுல விவசாயம் செய்த காலத்துல, கடலைக்கொடியில இருந்து கடலையைப் பிரிச்சு எடுக்குறதுக்காக ஒரு சின்னக் குழியை வெட்டி, அதுல கடலைக் கொடிகளைப் போட்டு, நடுவுல ஒரு குச்சியை வெச்சு அடிப்போம். கடலைக்காயெல்லாம் தனியா வந்துடும். ஒரே மூச்சுல ஒரு மூட்டை கடலையை இப்படி ஆய்ஞ்சி எடுத்தாலும், கை வலியே தெரியாது. சின்ன வயசுல இப்படி கடலையைப் பிரிச்செடுத்த விஷயம் அப்படியே எம் மனசுல இருக்க, அதை வெச்சே கடலைப் பிரிக்கறதுக்கான கருவியை மனசுக்குள்ள வடிவமைச்சேன்” என்று சொல்லும் அந்தோணியின் சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம். ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு, குடும்பத்துக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்திருக்கிறார். ஆசிரியர் பணி கிடைக்கவே, விவசாயத்துக்கு விடை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக, அவை பற்றிய விவரங்களைச் சேகரிப்பதையும் செய்து வந்திருக்கிறார். அது, இந்த சந்தர்ப்பத்தில் கைகொடுக்க, கடலையைப் பிரிக்கும் கருவியை உருவாக்கிவிட்டார்.
அந்தக் கருவியின் வடிவமைப்பு பற்றி நம்மிடம் விவரித்த அந்தோணி, தொடர்கிறார்…

“முக்கால் அங்குல ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார் பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன் நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில் சட்டத்தை இணைத்து, மேல்புறம் திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும். கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு பேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்து கொள்ள வேண்டும். உருளையின் நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். 
கீழ்ப்பகுதியில் சரிவாக சல்லடைத் தகடைப் பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவி தயார்” என்றவர், தான் வடிவமைத்து, தன் வீட்டில் வைத்திருக்கும் கருவியை இயக்கியும் காட்டினார். மேற்புறமிருந்து கடலைக் கொடியை அவர் உள்ளே காட்டக் காட்ட, பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியே பிரிந்து வந்து விழுந்தன, மின்னல் வேகத்தில்!
“கையில ஆயும்போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை ஆயுறதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும்போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

விவசாயிகளுக்காக இவர் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவி பற்றிய செய்தி, வெளியில் பரவினால், உடனே தாங்களே கண்டுபிடித்தது போல பதிவு செய்துகொண்டு, பணம் பார்க்க ஆரம்பிக்கும் கூட்டம் இங்கே அதிகம். அதனால், இந்தக் கண்டுபிடிப்பை முதலில் உரிய முறையில் பதிவு செய்யவேண்டும் என்று அந்தோணியிடம் கூறிய நாம், ‘அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கம்’ என்பதை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த ‘சேவா’ விவேகாநந்தன், கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். அவரும், ”நான் அந்தோணிக்கு உரிய உதவிகள் செய்து, அதைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறேன். இந்தக் கருவி, எல்லா விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றால், இப்படி பதிவு செய்வதுதான் நல்லது. அதன் பிறகு, அரசு நிறுவனங்கள் மூலமாகக் கூட இதை வெளியில் கொண்டு வரலாம்” என்று ஆர்வத்தோடு சொன்னார்.

படங்கள் ச. தமிழ்க்குமரன்
தொடர்புக்கு அந்தோணி,
அலைபேசி 90035-30695

No comments:

Post a Comment