December 17, 2014

வாங்க விவசாயம் செய்யலாம்…!

வாங்க விவசாயம் செய்யலாம்…!


வாங்க விவசாயம் செய்யலாம்…!

உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும் இருக்கிறது. நம்முடைய அப்பா, அம்மா எல்லாம் இந்த விவசாயத்தை வெச்சுதான் நம்மை படிக்க வெச்சாங்க. அவர்களுக்கெல்லாம் கைக்கொடுத்த விவசாயத் தொழில், இந்த தலைமுறைக்கு மட்டும் ரொம்ப தூரம் விலகியே இருக்கிறது?

10462498_1510112782535403_9030886663071926435_n

பெற்றோர்களுக்கு ஒரே எண்ணம் மத்த புள்ளைங்க மாதிரி நம்ம புள்ளயும் வயல்ல வேலை செய்யணுமா? என்ற கவுரத பிரச்னைதான். இதையெல்லாம் கடந்து நீங்கள் வேலை செய்து கொண்டே மாற்றுத் தொழிலாக விவசாயத்தை தேர்ந்தெடுக்க உள்ளவரோ? அல்லது முழுநேரமாக விவசாயம் செய்ய விருப்பமுள்ளவரோ எவராக இருந்தாலும் விவசாயத்தை தொழிலாக நினைத்து செய்ய நினைப்பவர்களுக்கு சில யோசனைகள்:
1. ‘விவசாயம் என்பது தொழில் அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை’ என்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயத்தில் இறங்கினால் லாப நஷ்டத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். அதிலும் இயற்கை விவசாய முறை எளிதானது. செலவில்லாததும்கூட. உண்மையாக இந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் அது இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு இறங்கினாலும் சுற்றியிருப்பவர்கள் உங்களையெல்லாம் அப்படி சும்மா விடமாட்டார்கள். ஏதோ உரக்கம்பெனியெல்லாம் இவங்களோட சொந்தகாரர்களது மாதிரிதான் ரசாயன விவசாயத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு இருப்பாங்க. காதுலே போட்டுக்காம தைரியமா இறங்குங்க. இயற்கை விவசாயத்திலேயும் அதிக மகசூல் எடுத்துட்டு லாபம் பாத்துட்டு இருக்கிற விவசாயிகள் நிறையபேர் இருக்காங்க.
.
2. மேட்டு நிலமோ, பாசன நிலமோ தமிழ்நாட்டில் ஒரு ஏக்கர் நிலம் 5 லட்சத்துக்கு கீழ் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி கிடைக்கிறது என்றால் கவனமாக விசாரித்து வாங்குங்கள். சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாயத்துக்கு வாங்கக்கூடிய நிலத்தின் விலை 1 ஏக்கர் 15 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 40 லட்சம் வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. தாம்பரம், கேளம்பாக்கம், செங்குன்றம், கிழக்கு கடற்கரை சாலை, ஸ்ரீபெரும்புதூர் இதில் விதிவிலக்கு. இவ்ளோ தொகை கொடுத்து நிலத்தை வாங்குணுமா? என்று கேட்காதீர்கள். உங்கள் வருங்காலத்துக்கு நீங்க செஞ்சு வைக்கிற முதலீடாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.

3. பாசன வசதிக்கொண்ட நிலங்களைவிட, மேட்டு நிலங்கள்தான் இப்போது விற்பனைக்கு அதிகம் கிடைக்கும் சூழல் உள்ளது. அதை வாங்கி பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், மரங்களை வளர்ப்பது என ஏதாவது ஒரு பயிரை விளைய வைக்கலாம். 5 ஆண்டுக்குள் வளரக்கூடிய மர வகைகள் கூட இப்போது இருக்கிறது. மேட்டு நிலங்களைகூட பாசன நிலங்களாக மாற்ற முடியும். அதற்கு முயற்சியும், உழைப்பும் தேவை.

4. விவசாயத்துக்கு தண்ணீர்தான் தலையாய பிரச்னை. ‘தண்ணீர் இல்லாததனால்தான் விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறிவிட்டனர்’ என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. அவர்களால் மாற்று முயற்சிகளை கையாளததே காரணம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் வளத்துக்கு நம் முன்னோர்கள் செய்துவிட்டு போன வசதிகள்தான் கைகொடுத்துட்டு இருக்கு. தண்ணீர் வளத்துக்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை கேட்டு¢ப் பாருங்கள் உண்மை புரியும். இன்றும் தங்களுடைய தோட்டங்களில் தண்ணீர் வளத்தை பெருக்கியுள்ள விவசாயிகளின் நிலத்தை போய் பாருங்கள். உங்களுக்கும் புதுபுது யோசனைகள் தோன்றும். சாதாரண உடலுழைப்பை வைத்தேகூட தண்ணீர் வளத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.

5. நிலம் வாங்கிய இடத்திலுள்ள கிராமத்தினரோடு முடிந்தளவு அனுசரித்து போவதே அந்த பகுதியில் நீங்கள் நீடித்து விவசாயம் செய்ய வழிவகுக்கும். விவசாயத்தில் நீங்கள் எந்த முயற்சியை எடுத்தாலும் கிராமத்தினர் இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். அதில் சரி என்று படுபவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை தவிர்த்துவிடுங்கள். அவர்கள் பார்வையில் இயற்கை விவசாயமே நகைப்புக்கு உரியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பலன்களை எடுத்து சொன்னால் அமைதியாகி விடுவார்கள். வாங்கும் நிலத்தில் ஆட்களை அமர்த்துவதற்கு அந்த ஊர் ஆட்களை நியமிப்பதே சரியானது. ஆனால் தொடர்ந்து கண்காணிப்பும், கவனமும் தேவை

6. பயிர் சாகுபடி சம்பந்தமான பயிற்சிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையங்கள், கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களின் வேலையே விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி, பூச்சி மேலாண்மை, பண்ணை இயந்திரங்கள், ஆடு, மாடு வளர்ப்பு சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவதும், அதற்கான சந்தேகங்களை தீர்த்து வைப்பதுதான். நீங்களிருக்கும் மாவட்டத்தில் வேளாண் மையங்கள் சரியாக செயல்படவில்லையென்றால் சிறப்பாக செயல்படும் அருகிலுள்ள மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு கட்டணங்கள் கிடையாது. அதேமாதிரி எல்லா பயிர்களுக்கும் பயிற்சி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகளின் தொடர்பு மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து பேராசிரியர்களின் அறிமுகம், நட்பு போன்றவற்றின் மூலம் இன்னும் உங்கள் விவசாயத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்.

7. கீரை வகைகள் 17 நாட்களிலிருந்தும், காய்கறிகள் 45 நாட்களிலிருந்தும் அறுவடைக்கு வந்துவிடும். கம்பு, சோளம், கேழ்வரகு, வேர்கடலை 3 மாதங்களிலும், நெல் ரகங்கள் 4லிருந்து 6 மாதத்துக்குள்ளும், வாழை, கரும்பு 1 வருடத்திற்குள்ளும் அறுவடைக்கு வரும். பொதுவாக கோடை மழைக்கு உழவு ஓட்டி, ஆடிப்பட்டத்தில்(சம்பா) விதைப்பு பணி நடக்கும். அந்தந்த பட்டங்களில் பயிர் செய்து பழகுங்கள். தண்ணீர் வசதி இருப்பவர்கள் ஆண்டுதோறும் பயிர் செய்துவரும் வழக்கமும் இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு பயிர்களை தேர்ந்தெடுத்து செய்யலாம்.
8. விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி என ஏதாவதொன்றை கூடுதல் தொழிலாக செய்து கொண்டிருங்கள். கூடுதல் வருமானமாக இருக்கும். விவசாயத்தில் வருமானம் குறையும்போது கால்நடைகள் உங்களை காப்பாற்றிவிடும்.

9. அக்கம் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ அவர்கள் வாங்கும் விலைக்கே நீங்கள் உற்பத்தி செய்யும் அரிசியோ, காய்கறி, தானியங்களை விற்க முடியும். ஆனால் எல்லாவற்றையும் அதேமாதிரியும் விற்க முடியாது. அருகிலுள்ள சந்தைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் அந்தந்த ஊர்களில் இருந்து விவசாயிகள் கூட்டாக வண்டிகளில் வெளியூர்களுக்கு விளைபொருட்களை அனுப்பும் வழக்கமும் இருந்து வருகிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

10. பணஉதவிக்கு அந்தந்த கிராமங்களில் செயல்படும் மகளிர் மற்றும் ஆண்கள் சுயஉதவிக் குழுவில் இணைந்து குறைந்த வட்டியில் கடன்களை பெற்று விவசாயம் செய்யலாம். வங்கிகளிலும் உங்களுக்கான உரிய ஆவணங்கள் இருந்தால் லோன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பண்ணை கருவிகளும் 50% மானியத்தில் கிடைத்து வருகிறது. சொட்டு நீர் கருவிகள் 100% மானியத்திலம், மல்ஷீங் சீட் குறைந்த மானியத் தொகையிலும் கிடைக்கிறது. ஆனால் இதற்கு அரசாங்க கதவுகளை பலமாக தட்டவேண்டும்.
விவசாயத்தில் தொடர்ந்து ஆர்வமும், முயற்சியும் இருந்தால், மற்ற தொழில்களை போல விவசாயத்திலும் நிலைக்க முடியும். விவசாய விளைப்பொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். திட்டமிட்டு செய்தால் பலன் நிச்சயம்.

No comments:

Post a Comment