February 16, 2017

இ.எம்.தயாரிப்பது எப்படி?

இ.எம்.தயாரிப்பது எப்படி?

இ.எம். என்கிற திறமி தயாரிப்பு இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்...

பப்பாளி-1 கிலோ,
பரங்கி-1 கிலோ,
வாழைப்பழம்-1 கிலோ,
நாட்டுச்சர்க்கரை-1 கிலோ,
முட்டை-1


பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும். அடுத்த 15-ம் நாள்...

அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.

இதைத் தெளிப்பதால் இலைச்சுருட்டு நோய், மஞ்சள் நோய் போன்றவை கட்டுப்படுகின்றன. பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் போலவே இந்த இ.எம். திறமி நுண்ணுயிரியும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பாசனநீரில் கலந்துவிட்டாலே போதுமானது. ஒரு முறை தயாரித்தால்... ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
_____x___________x___________x___________x___________x___________x___


வேப்பங்கொட்டை கரைசல்::

பூச்சியை விரட்டி அடிக்கவும், பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகவும், ஏற்கெனவே இருக்கும் நோய்களைத் துரத்தவும், இது பயன்படும்.

பத்து கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி, 20 லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரம் வைத்திருக்கவும். பின்பு இதை வடிகட்டி 200 லிட்டர் நீருடன் 100 கிராம் காதி சோப்பு (கரைசல் பயிர்களின் மீது ஒட்டுவதற்காக) கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கவும். ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்க் வரை பிடிக்கும்.

இதனால் கம்பளிப் புழுக்கள், அசுவினி, தத்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், புகையான், இலை சுருட்டுப்புழு, ஆனைக் கொம்பன், கதிர்நாவாய் பூச்சிகள் கட்டுப்படுகின்றன. மேலும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவையும் கட்டுப்படுகின்றன.

Courtesy:: www.facebook.com/வாங்க-விற்க-563035333829934

No comments:

Post a Comment