February 15, 2017

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...
கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்...
கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன்
 கால்நடை
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.

கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு!
ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !
நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.
வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.
மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா  வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !
ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு   120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.
அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.
காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.
பேன்களைத் துரத்தும் மண்குளியல் !
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து  ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,
''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.

 இப்படித்தான் வளர்க்கணும்
 கொட்டகையின் நீளம் 20 அடி. அகலம் 10 அடி. தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல், 3 அடி உயரத்துக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை, கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டகையின் முன்பகுதியில் 40 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு மூன்று புறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு, அதன் மீது நைலானாலான மீன் வலை அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்டுக்கோழிகளை வளர்க்க, இந்த அளவு போதுமானது.
கோழிகளால் இங்கு தாராளமாக நடமாட முடியும். தேவையான வெயில் கிடைக்கும். அதேசமயம் வெளியேற முடியாது. நிழல் தேவை என்றால், கொட்டகைக்குள் வந்து அடைந்து கொள்ளும். தினமும் காலை 6 மணிக்கு கொட்டகையைத் திறந்து விட்டு, மாலை 6 மணிக்கு கொட்டகைக்குள் கோழிகளை அடைத்து விடலாம். வெளிப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பாம்பு, காட்டுப்பூனை போன்ற ஜீவராசிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அமைக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
4 மாதம் வரை குஞ்சுத்தீவனம் !    
 பொரித்ததில் இருந்து 15 நாட்கள் வரை ஒரு கோழிக்குஞ்சுக்கு தினமும் சுமார் 5 கிராம் வரை குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். அடுத்த15 நாட்களுக்கு தினமும் 10 கிராம் அளவுக்கு குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாத வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 4-ம் மாதத்திலிருந்து வளர்ந்த கோழிகளுக்கான தீவனத்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நாமே தயாரித்துக் கொடுக்கலாம்.
கோழிகள் முட்டையிட்ட உடனே, ஒரு மண்பானையில் உமியைப் பரப்பி முட்டைகளை வைத்து ஈரத்துணியால் முடி வைக்க வேண்டும். முட்டைகள் சேர்ந்த பிறகு இன்குபேட்டரில் வைத்துப் பொரிக்க வேண்டும்.
21 நாளில் குஞ்சுகள் பொரித்துவிடும். பிறந்த குஞ்சுகளை சுமார் ஒன்றரையடி உயரம், 4 அடி விட்டத்துக்கு வட்ட வடிவில் அட்டைகளை வைத்து ப்ரூடர் (செயற்கை வெப்பம் ஏற்படுத்தும் விளக்கு) அமைத்து, அதற்குள் விட வேண்டும். ஒரு மாதம் வரை குஞ்சுகளுக்கு பல்பு மூலம் வெப்பம் கொடுக்க வேண்டும்.

Nattu Koli valarpu Nanmaigal

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது
நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

No comments:

Post a Comment